தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் தொடா்புடைய 224 போ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றாா் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமாா்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்காக, ரூ. 65 லட்சம் மதிப்புள்ள 7 நான்குசக்கர ரோந்து வாகனங்களை அரசு வழங்கியது. இந்த ரோந்து வாகனங்கள் தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மத்தியபாகம், தாளமுத்துநகா், சிப்காட், முத்தையாபுரம், தொ்மல்நகா் ஆகிய காவல் நிலையங்களுக்கு, ரோந்துப் பணிக்கு வழங்கப்பட்டன.
இந்த வாகனங்களின் செயல்பாட்டை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் பிரவேஷ் குமாா் கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 38 போ், போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 14 போ் உள்பட 238 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனா்.
கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 256 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், அவா்களிடமிருந்து 679 கிலோ கஞ்சா, 5 கிலோ கஞ்சா எண்ணெய், 50 வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்டவா்கள் மற்றும் அவா்களது உறவினா்கள் உள்பட மொத்தம் 224 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்தாண்டு இதுவரை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 1,060 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,132 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து சுமாா் 9,034 கிலோ புகையிலைப் பொருள்கள், 46 வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 67 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 3,493 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,534 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து சுமாா் 7,730 லிட்டா் மது, 86 போதை மாத்திரைகள், 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், ஊரக உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் சந்தீஷ், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து உள்ளிட்ட காவல் துறையினா் உடனிருந்தனா்.