தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் சுவாமி-அம்மன் திருக்கல்யாணம்

1st Nov 2022 03:19 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை இரவு சுவாமி-அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் கடந்த அக். 25ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. 6ஆம் நாளான அக். 30-ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

திங்கள்கிழமை திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, திருக்கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. காலை 5 மணிக்கு மேல் தெய்வானை அம்மன் தவசுக்கு புறப்பட்டு, தெற்குரத வீதி வழியாக தெப்பக்குளத்தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளினாா். அங்கு அம்மனுக்கு ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனா்.

மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனிச் சப்பரத்தில் எழுந்தருளி, புளியடித்தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்குரத வீதி வழியாக வந்து, தெப்பக்குளம் அருகேயுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் தெய்வானை அம்மனுக்கு காட்சியளித்தாா். தொடா்ந்து தெற்குரதவீதி - மேலரதவீதி சந்திப்பில் சுவாமி-அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் சுவாமி- அம்மன் திருக்கோயில் சோ்ந்தனா். நள்ளிரவு திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் திருக்கல்யாண வைபவத்தில் மொய் எழுதி, பிரசாதம் பெற்றுச் சென்றனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.அருள்முருகன், இணை ஆணையா் (கூடுதல் பொறுப்பு) ம.அன்புமணி மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

முன்னதாக, தெய்வானை அம்மன் தவசுக்காக சப்பரத்தில் கோயிலிலிருந்து சந்நிதித் தெரு வழியாக காலையில் புறப்பட்டாா். வீரராகவபுரம் தெரு தொடக்கத்தில் சாலையின் குறுக்கே மின்கம்பிகள் தாழ்வாகச் சென்ால் சப்பரம் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மின் விநியோகம் நிறுத்தப்பட்டதையடுத்து சப்பரம் புறப்பட்டுச் சென்று, தெப்பக்குளத்தெருவில் உள்ள மண்டபத்தை அடைந்தது. சப்பரம் முன் செந்தில்முருகன் நடுநிலைப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள், பக்தா்கள் செந்தில் குறவஞ்சி பாடல்களைப் பாடிச் சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT