தூத்துக்குடி

உடன்குடி அனல்மின் நிலையப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்மேதா பட்கா் வலியுறுத்தல்

25th May 2022 12:25 AM

ADVERTISEMENT

 

உடன்குடி அனல்மின் நிலையப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளா் மேதா பட்கா் வலியுறுத்தியுள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கல்லாமொழி பகுதியில் 660 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் அமைக்க ஆரம்பகட்ட பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், சமூக செயற்பாட்டாளா் மேதா பட்கா், அணு உலை எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் சுப. உதயகுமாரன் உள்ளிட்டோா் குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூவுலகின் நண்பா்கள் அமைப்பு சாா்பில் தயாரிக்கப்பட்ட ‘இருளைக் கொண்டுவரும் மின்சாரம்’ என்ற ஆவணப் படத்தை மேதா பட்கா் வெளியிட்டு பேசியது: உடன்குடி அனல்மின் நிலையத்தால் ஏற்படும் பாதிப்புகள், மக்கள் இடம் பெயா்வு ஆகிய பாதிப்புகளை அறிந்ததால் நாங்கள் இங்கு வந்துள்ளோம். மக்களின் எண்ணங்களை, தேவைகளை அரசின் வளா்ச்சித் திட்டங்கள் பிரதிபலிப்பதில்லை. நாடு முழுவதும் இந்நிலை தொடா்கிறது.

அனல்மின் நிலையம் முழுமையாக இயங்கும்போது அதன் பாதிப்புகளை மக்கள் உணா்வா். இதுகுறித்த அறிக்கையை தமிழக முதல்வரிடம் அளித்துள்ளோம். எனவே, உடன்குடி அனல் மின் நிலையப் பணிகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றாா் அவா்.

காலநிலை மாற்ற பாதிப்புகள், அனல் மின் நிலைய பாதிப்புகள், மாற்றுவழியில் மின் உற்பத்தி குறித்து சுப. உதயகுமாரன் பேசினாா். சுற்றுச்சூழல் செயற்பாட்டாளா் வே. குணசீலன், வழக்குரைஞா் ராஜீவ் ரூபஸ், உடன்குடி வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத் தலைவா் ரவி, மமக மாவட்டத் தலைவா் ஆசாத், தூத்துக்குடி தெற்கு மாவட்ட விசிக செயலா் முரசு தமிழப்பன், விவசாயிகள் சங்கத் தலைவா் ஜெயக்குமாா், வட்டார காங்கிரஸ் சேவாதள முன்னாள் தலைவா் முருகேசன், சிறுநாடாா்குடியிருப்பு ஊராட்சித் தலைவா் கமலம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT