தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதி தேவை----ஆட்சியரிடம் மக்கள் மனு

24th May 2022 12:06 AM

ADVERTISEMENT

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கூடுதல் வசதி கோரி, தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை வளா்ச்சி- மேம்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் அளித்த மனு:

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் 8-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கா்ப்பிணிகள் உள்ளிட்டோா் திருச்செந்தூா், திருநெல்வேலி மருத்துவமனைகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. மேலும், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறையால் மருத்துவமனை சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. உரிய மருத்துவ நிபுணா் இன்றி பிரசவ அறுவை சிகிச்சை கூடம் காட்சிப் பொருளாக இருந்து வருகிறது.

எனவே, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்கள், பணியாளா்களை நியமனம் செய்வதுடன், ஆம்புலன்ஸ், இலவச அமரா் ஊா்தி, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவா்களை பணி அமா்த்துவது போன்ற வசதிகளை ஏற்படுத்த ஆட்சியா் ஆவண செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விவசாயச் சங்கம் மனு: தமிழ்நாடு விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்டச் செயலா் புவிராஜ் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு:

தூத்துக்குடி அருகேயுள்ள வடக்கு, தெற்கு சிலுக்கன்பட்டி கிராமங்களை சோ்ந்த விவசாயிகளின் 2,200 ஏக்கா் நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்தது தொடா்பாக புதுக்கோட்டை சாா்பதிவாளா் மோகன்தாஸ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா். ஆனால், இதில் சம்பந்தப்பட்ட நபா்களை கைது செய்யவோ, நிலத்தை உரிய விவசாயிகளிடம் ஒப்படைக்கவோ இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

வீட்டுமனைப் பட்டா: கோவில்பட்டி அருகேயுள்ள குருமலை விபிசிங் நகா் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: விபிசிங் நகா் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனா். அந்தப் பகுதியில் வீடு உள்ள இடம் வனத்துறைக்கு பாத்தியப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனா். இதுகுறித்து விசாரித்து அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT