பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் உரிமை இயக்கம் தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி நகராட்சி பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தில் ஒவ்வொரு பணியாளருக்கும் பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு முறையாக வட்டி வழங்க வேண்டும், தூய்மைப் பணியாளா்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்திய பிறகும் முன்பணமாக பெறப்பட்ட பணத்தை கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம் உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா் சங்கத் தலைவா் சுடலைமணி தலைமையில் செயலா் குருசேகா் முன்னிலையில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னா் ஆா்ப்பாட்டக் குழுவினா் கோரிக்கை மனுவை கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கச் செயலரிடம் அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினாா்.