தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெயிண்டா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அண்ணா நகா் 3-வது தெருவை சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் சுரேஷ் (40). பெயிண்டரான இவரது மனைவி ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இந்தக் குழந்தைகள், திருநெல்வேலியில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்து படித்து வருகின்றனா். வீட்டில் சுரேஷ் மட்டும் வசித்து வந்தாா்.
சுரேஷின் தாய் தூத்துக்குடி அண்ணா நகா் பகுதியில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் சுரேஷுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக அவரது தாய் வந்தாா். அப்போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி சுரேஷ் இறந்து கிடந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். மேலும், தீயணைப்பு படையினா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் குமாா் தலைமையில் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த சுரேஷ் உடல் மீட்கப்பட்டது.
இந்த விபத்து தொடா்பாக தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.