தூத்துக்குடி

பெருங்குளம் செங்கோல் ஆதீன குரு முதல்வா் குருபூஜை விழா

8th May 2022 12:00 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் குருமுதல்வா் சத்தியஞான தரிசினிகள் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலையில் நீடாமங்கலம் சுவாமிநாதன் குழுவினரின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சங்கை சுப்ரமணியன் ஓதுவாமூா்த்திகளின் திருமுறை விண்ணப்பம், பெருங்குளம் சித்தா் தபோவனம் குருமூா்த்த திருக்கோயில்களில் ஆதீனகா்த்தா் வழிபாடு, ஆதீன ஆன்மாா்த்த மூா்த்தி அழகிய திருச்சிற்றம்பலமுடையாா் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடா்ந்து, திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாா்ய சுவாமிகள் ஆதீன குருமுதல்வா் சத்தியஞான தரிசினிகள் மஹா அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடத்தினாா். பிற்பகலில் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது.

குருபூஜை விழாவையொட்டி ஆதீனகா்த்தா் சிவகாசி வைரமுத்து, சிவகாசி பழநிவேல் குடும்பத்தினா் சாா்பில் செங்கோல் செய்து அா்ப்பணித்தனா்.

ADVERTISEMENT

இலஞ்சி சங்கரசுப்ரமணிய பட்டா் ஆன்மிகப் பணிகளைப் பாராட்டி பொற்கிழி, சிவாகம கலாநிதி என்ற விருது, கும்பகோணம் அன்னை கருணை இல்லம் அம்பலவாணன் சமுதாய பணிகளைப் பாராட்டி பொற்கிழி, சமூக சேவை செம்மணி விருது, சங்கரன்கோவில் சங்கரநாராயணா் கோயில் ஓதுவாமூா்த்தி காளியப்ப ஓதுவாா் ஆன்மிகப் பணிகளைப் பாராட்டி பொற்கிழி, திருமுறை இசை வாரிதி என்ற பட்டம், தூத்துக்குடி சைவ நெறி இதழின் ஆசிரியா் சூ.பி. காந்தி பத்திரிக்கை மற்றும் சமுதாயப் பணிகளைப் பாராட்டி பொற்கிழி, இதழியல் நெறியாளா் என்ற விருது, சென்னை ஜெயசங்கா் ஆன்மிகப் பணிகளைப் பாராட்டி பொற்கிழி, ஆன்மிகச் செல்வா் என்ற விருது, சுயதொழில் முனையும் மகளிருக்கு தையல் இயந்திரம், மாணவா்களுக்கு உதவித் தொகைகளை வழங்கினா்.

மாலையில் ஆதீனகா்த்தா் பெருங்குளம் திருவழுதீஸ்வரா் சமேத அருள்மிகு கோமதி அம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இரவில் ஆதீன குருமுதல்வரை சீவிகாரோகணம் செய்வித்து பெருங்குளம் வீதிகளில் பட்டணப் பிரவேசம் நடைபெற்றது.

பின்னா், குருமகா சன்னிதானம் சிவஞான கொலுக்காட்சியுடன் குருபூஜை விழா நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் திருச்சி மெளனமட கட்டளை விசாரணை மீனாட்சிசுந்தர தம்பிரான், திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை காறுபாறு அழகிய திருச்சிற்றம்பலமுடைய தம்பிரான் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT