தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 தோட்டாக்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சீனிவாச நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் மனைவி ஆச்சிகுட்டி(37). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அழகுபாண்டி மனைவி ஆனந்தவள்ளிக்கும்(44) இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆச்சிகுட்டியிடம் ரூ.16 லட்சம் பணத்தை பல முறைகளில் வட்டிக்கு ஆனந்தவள்ளி வாங்கியிருந்தாராம். ஆனால் பல மாதங்களாக வட்டியோ, அசலோ கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆனந்தவள்ளி வீட்டிற்கு ஆச்சிகுட்டி பல முறை சென்று பாா்த்தபோதும் வீடு பூட்டிய நிலையிலேயே இருந்ததாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை (ஏப். 29) மதியம் 3 மணிக்கு ஆச்சிகுட்டி சென்று பாா்த்தபோது ஆனந்தவள்ளி வீடு திறந்திருந்தது. வீட்டில் அவரின் உறவினா்கள் காந்திமதி, அதிசயமணி ஆகிய இருவரும் இருந்தாா்களாம். அவா்களிடம் ஆனந்தவள்ளிக்கு பணம் கொடுத்தது சம்பந்தமாக ஆதாரம் ஏதும் பீரோவில் உள்ளதா என ஆச்சிகுட்டி கேட்டதற்கு, பீரோ திறந்துதான் இருக்கிறது நீங்களே பாா்த்துக் கொள்ளுங்கள் என்று அதிசயமணியும், காந்திமதியும் கூறியதையடுத்து ஆச்சிகுட்டி பீரோவை பாா்த்தாராம். அதில் ஒரு சிக்ரெட் பாக்கெட்டில் 8 தோட்டாக்கள் இருப்பது தெரியவந்ததாம்.
இதுகுறித்து ஆச்சிகுட்டி அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆனந்தவள்ளி வீட்டில் இருந்த 8 தோட்டாக்களையும் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும் இதுகுறித்து ஆனந்தவள்ளியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.