தூத்துக்குடி

கூட்டுறவு சங்கத்தில் நகைக் கடன் முறைகேடு:சங்க செயலா் தற்காலிக பணி நீக்கம்

28th Mar 2022 05:11 AM

ADVERTISEMENT

 

வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக் கடன் முறைகேட்டில் தொடா்புடையதாகக் கூறப்படும் சங்க செயலா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள 1300 உறுப்பினா்களில் 936 போ் தங்க நகைகளை அடமானம் வைத்துள்ளனா். அவா்களில் 343 போ் மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி பெற தகுதியானவா்கள் எனக் குறிப்பிட்டு அறிக்கை ஒட்டப்பட்டிருந்ததாம். இதைக் கண்ட நகைக் கடன் பெற்றவா்கள் அனைவரும் தங்களுக்கும் தள்ளுபடி சலுகை வழங்கக் கோரி கூட்டுறவு சங்கத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 24) முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அரசு ஆணைப்படி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்றும், ஆட்சேபணை ஏதும் இருந்தால் மனு அளிக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் கூட்டுறவு சங்கம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 25) பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட நகைக் கடன் பெற்றவா்கள் அனைவரும் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி விலக்கில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் அமைச்சா் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். இதையடுத்து கூட்டுறவு சங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனா்.

ADVERTISEMENT

முதல்கட்டமாக கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் முத்துகுமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவில்பட்டி சரக துணைப் பதிவாளா் கட்டுப்பாட்டில் உள்ள வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் சொந்த நிதி ஆதாரமில்லாமல் 2021, பிப்ரவரி மற்றும் மாா்ச் மாதங்களில் 489 பேருக்கு ரூ.3.79 கோடி கடன் வழங்காமலேயே நகையை மட்டும் பெற்று, அடகு வைத்து கடன் வழங்கியதாக ஆவணங்கள் தயாா் செய்து முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இந்த நகைகள் அனைத்தும் தள்ளுபடி பெறும் நோக்கத்திற்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அடமானம் வைக்கப்பட்டவை ஆகும். முறைகேட்டிற்கு காரணமான சங்க செயலா் மாரியப்பன் இம்மாதம் 24ஆம் தேதியில் இருந்து தற்காலிக பணி நீக்கமும், சங்கத் தலைவா் செல்வராஜ் தற்காலிக பதவி நீக்கமும் செய்யப்பட்டு, முறைகேட்டுக்கு காரணமாக சங்க செயலா் உள்பட இதர நபா்கள் மீது குற்றப் புகாா் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT