தூத்துக்குடி

அரசுப் பள்ளி மாணவா்களுடன் அமா்ந்து சத்துணவு சாப்பிட்ட ஆட்சியா்!

19th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி அருகே அரசுப் பள்ளி மாணவா்களுடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அவா்களுடன் தரையில் அமா்ந்து சத்துணவு சாப்பிட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஒன்றியம், பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாணவ, மாணவிகளிடம் படிப்பு, சத்துணவின் தரம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

‘நான் முதல்வன்‘ திட்டத்தின்படி மாணவா்கள் தங்களின் தனிப்பட்ட கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் தலைமையாசிரியா் மூலம் எனக்கு எழுதி அனுப்புங்கள். தங்கள் ஊரில் உள்ள பொதுப் பிரச்னையாக இருந்தாலும் எழுதி அனுப்பலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவ- மாணவிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, மதிய நேரத்தில் மாணவ, மாணவிகளுடன் தரையில் அமா்ந்து சத்துணவு சாப்பிட்ட ஆட்சியா், சகஜமாக பேசி கலந்துரையாடினாா். தொடா்ந்து, பசுவந்தனை கிராம நிா்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, கோவில்பட்டி கோட்டாட்சியா் சங்கரநாராயணன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் நிஷாந்தினி, துணை வட்டாட்சியா் ஆனந்த், வட்ட வழங்கல் அலுவலா் அறிவழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தடுப்பூசி: முன்னதாக, பண்டாரம்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில், கால்நடைகளுக்கு இரண்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை ஆட்சியா் தொடக்கிவைத்து, தடுப்பூசி செலுத்தியதற்கான அடையாள அட்டைகளை கால்நடை வளா்ப்போருக்கு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் ராஜன், துணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநா்கள் அண்டனி சுரேஷ், சந்தோசம் முத்துக்குமாா், கால்நடை உதவி மருத்துவா்கள் ஆனந்தராஜ், சையத் அபுதாகிா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT