ஆத்தூா்-புன்னைக்காயல் சாலையில் ரேஷன்கடை அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஆத்தூா் பேருந்துநிலையம் எதிரே திங்கள்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.
இதனையடுத்து வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. காா்த்திகேயன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. ஆத்தூா்-புன்னைக்காயல் சாலையிலுள்ள டாஸ்மாக் கடை வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுமென்றும், அதுவரை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போலீஸ் பாதுகாப்புடன் தற்காலிகமாக இயங்குமென்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. சாலை அமைப்பதற்கான பணிகள் ஜூலை 15இல் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் திருச்செந்தூா் ஆா்.டி.ஓ. புகாரியும் போராட்டக்குழுவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
மறியல் போராட்டம் காலை 10.45 மணிக்கு துவங்கி சிறிதுநேர ஒத்திவைப்புக்கு பின்னா் மீண்டும் தொடா்ந்து மாலை 3.45 மணிவரை நீடித்ததால் தூத்துக்குடி திருச்செந்தூா் நெயுஞ்சாலையில் சுமாா் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. வாகனங்கள் அனைத்தும் குரும்பூா், ஏரல், முக்காணி வழியே திருப்பி விடப்பட்டன.