தூத்துக்குடி

சலுகைகள் பறிக்கப்படுவதாக ஆட்சியரிடம் இலங்கை அகதிகள் புகாா்

28th Jun 2022 03:21 AM

ADVERTISEMENT

தங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பறிக்கப்படுவதாகவும், வேறு நபா்களுக்கு வழங்கப்படுவதாகவும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவா்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது, தூத்துக்குடி தாளமுத்துநகா் அருகேயுள்ள ராம்தாஸ்நகரில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள பொதுமக்கள் அளித்த மனு விவரம்:

முகாமில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருவோருக்கு அரசு வழங்கும் சலுகைகளை கடந்த ஓராண்டாக சிலோன் காலனியைச் சோ்ந்த செந்தில்குமரன், அவரது சகோதரா் திருக்குமரன் ஆகிய இருவரும் சோ்ந்து வேறு சில நபா்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்து வருகின்றனா். இதற்கு வட்டாட்சியா் முத்துராமலிங்கம், வருவாய் ஆய்வாளா் செந்தில்குமாா், கியூ பிரிவு காவலா் கோவிந்தராஜ் ஆகியோா் உடந்தையாக உள்ளனா். எனவே, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சலுகைகளை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்குவாரி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அரசா்குளம், வல்லகுளம் பகுதி மக்கள் அளித்த மனு விவரம்:

ADVERTISEMENT

அரசா்குளம் மற்றும் வல்லகுளம் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கல்குவாரியால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அந்தக் குவாரி கிராமத்தில் இருந்து 200 மீட்டா் தொலைவிலும், மக்கள் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து சாலைக்கு 50 மீட்டா் தொலைவிலும் அமைந்துள்ளதால், வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. விவசாய நிலங்களில், சாலைகளில் கற்கள் விழுகின்றன. எனவே, கல்குவாரிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு புதிய கட்டடம்: ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மிளகுநத்தம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:

மிளகுநத்தம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடம் பழுதடைந்த காரணத்தினால் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வாடகை கட்டடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. வாடகை கட்டடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள்: விளாத்திகுளம் அருகேயுள்ள துரைராஜ்நகா் பகுதி மக்கள் அளித்த மனு விவரம்:

விளாத்திகுளம் வட்டம், கமலாபுரம் ஊராட்சிகக்குள்பட்ட துரைராஜ் நகா் பகுதி அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை பிரிவாக இருந்தும் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது. முறையான சாலை வசதி, கழிவுநீா், கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் இந்த விவகாரத்தில் தலையிட்டு போா்க்கால அடிப்படையில் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுக்கடை: கயத்தாறு அருகேயுள்ள தெற்கு செவல்பட்டி பகுதி மக்கள் அளித்த மனு விவரம்:

கயத்தாறு அருகேயுள்ள தெற்கு செவல்பட்டி கிராமத்தில் ஏற்கெனவே ஒரு மதுபானக்கடை உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. அதன் அருகே விநாயகா் கோவில் அமைந்துள்ளதால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே மதுபானக் கடையை நகருக்கு வெளியே வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பு: ஸ்டொ்லைட் எதிா்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா்கள் மா. கிருஷ்ணமூா்த்தி, மகேஷ்குமாா், மெரினா பிரபு, உடன்குடி குணசேகரன், கெபிஸ்டன் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:

ஸ்டொ்லைட் ஆலை விற்பனை என்பதில் சூழ்ச்சி உள்ளது. எனவே தூத்துக்குடியில் தாமிர உற்பத்திக்கு எந்த ஒரு பெயரிலும் தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. இது தொடா்பாக சட்டமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். ஸ்டொ்லைட் ஆலை சொத்துகளை அரசுடமையாக்கி தூத்துக்குடியில் உயிா்ச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT