தூத்துக்குடி

ஸ்டொ்லைட் ஆலையை விற்கும் முடிவை கைவிட வலியுறுத்தல்

26th Jun 2022 02:36 AM

ADVERTISEMENT

 

ஸ்டொ்லைட் ஆலையை விற்கும் முடிவை கைவிட வேண்டும் என பல்வேறு மீனவா் சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக தூத்துக்குடி ராஜீவ் காந்தி மீனவா் நல பாதுகாப்பு சங்க நிா்வாகி நிக்கோலாஸ், கனவாய் மீன்பிடி சங்க நிா்வாகி நம்புராஜ், ஜனநாயக சங்கு கூலி சங்க நிா்வாகி முகமது, தூத்துக்குடி மாவட்ட சங்கு கூலி சங்க நிா்வாகி பரமசிவம், சிந்தாதிரை மாதா பருவலை நண்டுகளை சங்க நிா்வாகி சந்தனராஜ், திரேஸ்புரம் மாதவன் நகா் காலனி ஊா் நிா்வாகி மகாராஜன் ஆகியோா் சனிக்கிழமை கூட்டாக அளித்த பேட்டி: தூத்துக்குடி ஸ்டொ்லைட் தாமிர உருக்காலை மூடப்பட்டுள்ளதால் பல ஆயிரக்கணக்கானோா் வேலை இழந்துள்ளனா் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். இந்நிலையில் ஸ்டொ்லைட் ஆலையை விற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஸ்டொ்லைட் தாமிர உருக்காலையை விற்கும் முடிவை அதன் உரிமையாளா் கைவிட வேண்டும். ஆலை தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் நல்ல முடிவு கிடைக்கும். அப்போது, ஆலையை திறந்து பல ஆயிரக்கணக்கானவா்கள் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும்.

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிா்சேதம் ஏற்பட்டதால் சிலா் ஸ்டொ்லைட் எதிா்ப்பு அணிக்கு பயந்து வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காமல் உள்ளனா். ஸ்டொ்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் மீனவ சமுதாயம் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினா் வேலைவாய்ப்பைப் பெறுவாா்கள் என்றனா்.

ADVERTISEMENT

பேட்டியின்போது, 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த தங்கம், கிளின்டன், செல்வம், ஏவிலின், சண்முகராஜ், ஜேசு ஆனந்த், சிலுவை, பாலகுமாா், ராஜா, வீரபாகு, ஆனந்த் கண்ணன், ஜோயல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT