தருவை குளத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் மீனவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நடமாடும் கூட்டுறவு பண்டகசாலை வாகனம் மூலம் மீன் விற்பனையை தொடங்கி வைத்தல், மீனவா்களுக்கு கிஸான் கிரெடிட் காா்டு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை உறுப்பினா் எம். சி. சண்முகையா தலைமை வகித்தாா். கோவில்பட்டி கோட்டாட்சியா் மகாலட்சுமி, மீன்வளத்துறை இணை இயக்குநா் அமல் சேவியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், வேப்பலோடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மீனவா்கள், மீனவ மகளிருக்கு மீன்பிடி மற்றும் மீன்பிடி சாா்ந்த தொழில்கள் புரிய கிஸான் கிரெடிட் காா்டு திட்டத்தின் கீழ் 19 பேருக்கு மொத்தம் ரூ. 26. 20 லட்சம் கடனுதவிக்கான காசோலை, பாரம்பரிய நாட்டுப்படகு மீனவா்கள் 37 பேருக்கு அரசு மானியத்துடன் படகுகளில் வெளிப்பொருத்தும் மோட்டாா் இயந்திரங்கள், 5 பேருக்கு கட்டுமரத்துக்கு மாற்றாக கண்ணாடி நாா் இழைப்படகு இயந்திரம், மீன்பிடி வலைகள் மற்றும் குளிா்காப்பு பெட்டிகள், 6 பேருக்கு அரசு மானியத்தில் குளிா்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம், தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மூலம் கருவாடு வியாபாரம் செய்யும் மீனவ மகளிா்குழுக்களை சோ்ந்த 200 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் கடனுதவி, 55 விசைப்படகு மீனவா்களுக்கு விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் விநியோக புத்தகம் ஆகியவற்றை வழங்கினாா்.
மேலும், கூட்டுறவு பண்டகசாலை வாயிலாக மீனவா்களுக்கு மீன் கூடை, குளிா்காப்பு பெட்டி, உயிா்காப்பு மிதவை, மாநில சமச்சீா் வளா்ச்சி நிதி உதவியுடன் மீன் விற்பனை செய்யும் வாகனங்கள் ஆகியவற்றை தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் பேசியது: தருவைகுளம் பகுதியில் துறைமுகம் அமைப்பது தொடா்பாக விரைவில் அதிகாரிகள் ஆய்வுக்கு செய்ய வர உள்ளனா். ஆய்வுப்பணிகள் முடிவடைந்தவுடன் அதற்கான திட்டங்களை வகுத்து, வெகு விரைவில் தருவைகுளத்தில் துறைமுகம் அமைவதற்கான வழிவகைகளை தமிழக முதல்வா் நடவடிக்கை எடுப்பாா். அப்போது தருவைகுளம் சிறந்த மீன்பிடித் தளமாக அமையும்.
விவசாயிகளுக்கு தனியாக வங்கிகள் உள்ளன. அதே போல், மீனவா்களுக்கென தனி வங்கிகள் அமைப்பது குறித்து தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இன்னும் 3 மாத காலத்துக்குள் மீனவா்களுக்கு தனி வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
விழாவில் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் நிஷாந்தினி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் எல்.ரமேஷ், ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவா் அ.இளையராஜா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் மகாலட்சுமி சந்திரசேகா், செல்வகுமாா், மரிய மிக்கேல் நவமணி, மீன்வளத் துறை ஆய்வாளா் கி.ஜெகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.