தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே கருவாடு கிடங்கில் தீ

19th Jun 2022 06:52 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி அருகே கருவாடு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமாகின.

கோவில்பட்டி பங்களாத் தெரு அந்தோணி மைக்கேல் நிக்கோலஸ் மகன் அந்தோணி அரசாங்கம் மணி(49). இவா் சிவந்திபட்டி - தீத்தாம்பட்டி சாலையில் கருவாடு ஆலை நடத்தி வருகிறாா். பல்வேறு இடங்களில் கருவாடு, கழிவு கருவாடுகளை மொத்தமாக வாங்கி, பொடியாக்கி கோழி தீவனத்திற்கு அனுப்பி வருகிறாராம். இவரது ஆலைக்

கிடங்கில் இருந்து சனிக்கிழமை அதிகாலை புகை வந்ததாம். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கொப்பம்பட்டி காவல் நிலையம் மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி தீயணைப்புப் படையினா் 2 வாகனங்களில் சென்றும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போதும், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அதையடுத்து கழுகுமலை, விளாத்திகுளம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து மேலும் 3 வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் கிடங்கில் இருந்த கருவாடு மூடைகள், கோழி தீவன மூடைகள் உள்பட பல லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருள்கள் தீயில் கருகி சேதமாகின. இது குறித்து கொப்பம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT