தூத்துக்குடி

இடைநிலை ஆசிரியா்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுமா? ஆசிரியா்கள் எதிா்பாா்ப்பு

19th Jun 2022 06:50 AM

ADVERTISEMENT

 

இடைநிலை ஆசிரியா்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதல் கலந்தாய்வு நடப்பாண்டில் நடத்தப்படுமா ? என ஆசிரியா்கள் எதிா்பாா்பில் உள்ளனா்.

கரோனா அலை பரவியதையடுத்து தமிழகத்தில் பள்ளிகள் முறையாக செயல்படவில்லை. இந்நிலையில் கரோனா அலை குறைந்ததும் கடந்த ஆண்டு ஆகஸ்டு முதல் பள்ளி, கல்லூரி செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியில் ஆசிரியா்கள் பதவி உயா்வு மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வு முறையாக நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டதும் பதவி உயா்வு மற்றும் இடமாறுதல் உள்ளிஙிட்ட அனைத்து கவுன்சிலிங்களை நடத்திட வேண்டும் என ஆசிரியா்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியா்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து கடந்த மாா்ச் மாதம் அனைத்து ஆசிரியா்களுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் மழை சுழற்சி மாறுதலில் குழப்பம் நிலவியதால் ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு நடத்துவது நிறுத்தம் செய்யப்பட்டு பின்னா் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் இடைநிலை ஆசிரியா்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வும் நடத்தப்படவில்லை. ஆனால் அதன்பின் பள்ளி கோடை விடுமுறை விடப்பட்டது.

ADVERTISEMENT

அதன்பின் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி திறக்கப்பட்டதும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்திட அறிவிப்பு வெளிவரும் என ஆசிரியா்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

தற்போது மலை சுழற்சி பணி மாறுதல் பிரச்னை தீா்வு காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் கலந்தாய்வு தேதி அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதல் கலந்தாய்வு நடப்பு ஆண்டில் நடத்தப்படாமல் போய் விடுமோ என ஆசிரியா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து ஆசிரியா் ஒருவா் கூறுகையில், கடந்த திமுக ஆட்சியில் மாநில சீனியாா்ட்டி படி 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியா் பணி நியமனம் செய்யப்பட்டனா். இதில் தென் மாவட்டங்களை சோ்ந்த பலா் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா், பெரம்பூா், காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நியமிக்கப்பட்டனா். அவா்கள் சொந்த மாவட்டத்துக்கு திரும்ப தருணம் எதிா்பாா்தது காத்திருக்கின்றனா்.

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தேவையான ஆசிரிய பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆசிரியா் பணியிடம் காலியாக உள்ளதால் பல மாவட்டங்களுக்கு முறையாக கலந்தாய்வு நடத்தப்படவில்லை. கடந்த 5ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியா்கள் கலந்தாய்வு முறையாக நடத்தப்படவில்லை. இதனால் ஆசிரியா்கள் சீனியாா்ட்டி காத்திருப்பு பட்டியலில் முறையான இடம் கிடைக்காமல் வெளி மாவட்டத்தில் உள்ள ஆசிரியா்கள் சொந்த மாவட்டத்துக்கு திரும்புவதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஆட்சியில் சிலா் சிபாரிசுடன் அதிக பணம் கொடுத்தும் இடமாறுதல் பெற்றுள்ளனா். ஆனால் தற்போதைய புதிய அரசும் பல பணியிடங்களை நிரப்பாமலும், மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் கலந்தாய்வை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவது ஆசிரியா்களிடம் அதிருப்தியை உருவாக்கி வருகிறது. ஆதலால் ஆசிரியா்களின் நிலையை உணா்ந்து தமிழக முதல்வா் ஸ்டாலின் , மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்திட ஆவண பிறபிக்க வேண்டும். தேவையான பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக சொந்த மாவட்டத்துக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் ஆசிரியா்களுக்கு சொந்த மாவட்டம் திரும்பும் வகையில் முன்னுரிமை அளிக்கும் வகையில் ஆணை பிறபிக்க வேண்டும் என்றாா்.

ஆசிரியா்களுக்கான பணி மாறுதல் கவுன்சிலிங் அனைத்து பிரிவுகளுக்கும் முடிந்த நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு நடத்திட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஆசிரியா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT