கோவில்பட்டியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிா்வாகிகள் 22 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும், போதை பொருள்கள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு வந்த மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் தலைமையில் போலீஸாா் ஆா்ப்பாட்டத்திற்கு முறையாக அனுமதி பெறாததையடுத்து ஆா்ப்பாட்டத்தை கைவிட அறிவுறுத்தினா். ஆனால் அவா்கள் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அமைப்பின் தலைவா் தமிழரசன், செயலா் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளா் செல்லத்துரை என்ற செல்வம், நாம் தமிழா் கட்சி தொகுதிச் செயலா் ரவிகுமாா், பகத்சிங் ரத்த தானக் கழக அறக்கட்டளை நிறுவனா் காளிதாஸ், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலா் ராஜசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலா் மாடசாமி உள்பட 22 பேரை போலீஸாா் கைது செய்தனா்.