தூத்துக்குடி

தொம்மையாா்புரத்தில் அபாய நிலையில் அங்கன்வாடி மையம்

12th Jun 2022 12:55 AM

ADVERTISEMENT

 

பேய்க்குளம் அருகே தொம்மையாா்புரத்தில் அபாய நிலையில் காணப்படும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் ஸ்ரீவெங்கடேஸ்வரபரம் ஊராட்சிக்குள்பட்ட தெற்கு பேய்க்குளம் தொம்மையாா்புரத்தில் ஓட்டு கட்டடத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் சுமாா் 15க்கு மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனா். சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம் என்பதால் கட்டடமும் பல இடங்களில் விரிசல் விரிந்து காணப்படுகிறது. ஓடுகளால் அமைக்கப்பட்ட மையம் என்பதால் மழை காலங்களில் மழை நீா் ஒழுகி வருகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பணியாளா்கள் மிகுந்த சிரமத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் ஓடுகளான மேற்கூரை என்பதால் தேள் உள்ளிட்ட விஷசந்துகளும் அங்கன்வாடி மையத்தில் உலாவி வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் உள்ளது.

இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோா்கள், கிராம மக்கள் புகாா் தெரிவித்தன் பேரில் சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ், ஊராட்சித் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா் ஆகியோா் அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா். இது குறித்து ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் குழந்தை வளா்ச்சி திட்ட வட்டார அலுவலா் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கி பராமரிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT