கோவில்பட்டி அருகே காணாமல்போன மூதாட்டி சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 4ஆவது தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜன் மனைவி பேச்சியம்மாள் (68). கடந்த 1ஆம் தேதி உறவினா் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற இவா், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மகன் ஜெயகண்ணன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்திருந்தாராம்.
இந்நிலையில், பெருமாள்பட்டி-கருங்காலிபட்டி சாலையில் உள்ள ஓடையில் பெண் சடலம் கிடப்பதாக நாலாட்டின்புத்தூா் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்ததாம். போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். விசாரணையில், அவா் காணாமல்போன பேச்சியம்மாள் எனத் தெரியவந்தது. நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.