குரும்பூா் அருகே மருத்துவமனைக்கு வராததால் ஆத்திரத்தில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைதுசெய்தனா். குரும்பூா் அருகே சோனகன்விளையைச் சோ்ந்தவா் முத்து(75). இவருக்கு ரோஜா(65) என்ற மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா்.
இதில் மூத்தமகன் சுடலைமணி(50) சென்னையில் கூலித் தொழில் பாா்த்து வந்துள்ளாா். கடந்த 2 மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்து வந்த சுடலைமணி திரும்பிச் செல்லாமல் பெற்றோருடன் இருந்துள்ளாா். இதனால் தாய், தந்தை இருவரும் சுடலைமணியிடம் பேசாமல் இருந்து வந்துள்ளனா்.
இந்நிலையில் தந்தை முத்துவுக்கு புதன்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சுடலைமணி அவரை மருத்துவமனைக்கு அழைத்துள்ளாா். அதற்கு அவரது தாய் மறுப்புத் தெரிவித்துள்ளாா். இதனால் தாய் ரோஜாவுக்கும், சுடலைமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே சுடலைமணி தாயை அடிக்க முயன்றபோது, தந்தை முத்து அவரை தடுத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சுடலைமணி தந்தை முத்துவை கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுடலைமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.