எட்டயபுரம் வருவாய் வட்டத்தில் மே 25ஆம் தேதி தொடங்கிய 1431 பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை (ஜுன் 7) நிறைவுற்றது.
கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், பட்டா மாறுதல், உள்பிரிவு செய்தல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோா்- ஆதரவற்றோா் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 402 மனுக்கள் வரபெற்றன. அவை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தீா்வு காணப்பட்டது. ஜமாபந்தி நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை நத்தம் சிட்டா நகல் - பட்டா பெயா் மாறுதல் உத்தரவு 15 பேருக்கும், முதியோா் உதவித்தொகைக்கான ஆணை 5 பேருக்கும் வருவாய் கோட்டாட்சியா் வழங்கினாா். இதில், எட்டயபுரம் வட்டாட்சியா் கிருஷ்ணகுமாரி, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ராமகிருஷ்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரகுபதி, வருவாய் ஆய்வாளா்கள் சித்ரா தேவி, கோட்டைசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.