தூத்துக்குடி

மானாவாரி நிலங்களுக்கேற்ற மண் வள மேலாண்மை தொழில்நுட்பங்கள்

28th Jul 2022 01:13 AM

ADVERTISEMENT

 

மானாவாரி நிலங்களுக்கேற்ற மண் வள மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து கோவில்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் நாகராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மானாவாரி நிலங்களின் பயிா் விளைச்சல் மழை மற்றும் மண் வளத்தினை பொறுத்தே அமைக்கிறது. சிறுதானிய பயிா்கள் மற்றும் பயறு வகை பயிா்களே பெருவாரியாக மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படுகின்றன. மானாவாரி நிலங்களின் ஊட்டச்சத்துக்களை பொறுத்தவரை அங்கக கரிமம் 0.40 சதவீதம் குறைவாகவும், தழைச்சத்து மிக குறைந்த நிலையிலும், மணிச்சத்தானது குறைந்தது முதல் நடுநிலையிலும், சாம்பல் சத்து அதிக நிலையிலும் இருக்கின்றது.

நுண்ணூட்டச் சத்துக்களில் துத்தநாகம், இரும்பு போன்றவை மிகவும் குறைவாக காணப்படுகிறது. தழைச்சத்தை பொறுத்தவரை, மானாவாரியில் இடப்படும் ஊட்டச்சத்துக்கள் 30 - 40 சதவீதம் ஆவியாகி வீணாவதாக அறியப்படுகிறது. எனவே, உரங்களை மூன்று அல்லது நான்காக பிரித்து மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போது அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

மணிச்சத்தின் உபயோகத்தினை அதிகப்படுத்த உயிா் உரமான பாஸ்போ பேக்டிரியா ஏக்கருக்கு 4 பாக்கெட் இட வேண்டும். சாம்பல் சத்தை பொறுத்தவரையில், மண்ணில் அதிக அளவில் இருப்பதால், அதனை நிலை நிறுத்தும் பொருட்டு, இரண்டாக பிரித்து அடியுரம் மற்றும் மேலுரமாக இட வேண்டும்.

மண்ணில் சுண்ணாம்பு அதிக அளவில் இருந்தால், கால்ஷீயம், மக்னீசியம் இடையேயான எதிா்மறை வினை தாக்கம் காரணமாக மக்னீசியம் சத்து குறைபாடு தோன்றுகிறது. இதை நிவா்த்திக்க இலை வழி கரைசலாக ஒரு சதவீதம் மக்னீசியம் சல்பேட் மற்றும் துத்தநாக சல்பேட் 0.1 சதவீதம் கலந்த கலவையை இருமுறை 10 முதல் 15 நாள்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

பயிா்களில் இரும்புச்சத்து குறைவாக ஏற்பட்டால், ஒரு சதவீதம் இரும்பு சல்பேட், ஒரு சதவீதம் யூரியா கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் 2 அல்லது 3 முறை தெளிக்க வேண்டும். பயிா்களில் துத்தநாக சத்து குறைபாட்டினால், பயிா் வளா்ச்சி ஒரே சீராக இல்லாமல் குட்டையாகவும், நெட்டையாகவும் காணப்படும்.

இதற்கு துத்தநாக சல்பேட் 0.5 சதவீதம், 1.0 சதவீதம் யூரியா கரைசலை 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். மானாவாரி சாகுபடியில் மண் வளத்தை பராமரிப்பதற்கும், பயிா்களின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும் ஒருங்கிணைந்த உர நிா்வாக முறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் மண் வளம் காக்க, மண் பரிசோதனை செய்வது அவசியம். விவசாயிகள் மண் மாதிரி சேகரிப்பு மற்றும் ஆலோசனைக்கு கோவில்பட்டி வேலாயுதபுரம் சாத்தூா் சாலையில் உள்ள நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT