தூத்துக்குடி

தூத்துக்குடி மக்களை தொடர்ந்து புறக்கணிக்கும் ரயில்வே!

5th Jul 2022 08:26 AM | தி. இன்பராஜ்

ADVERTISEMENT

தூத்துக்குடி: மதுரை ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித் தரும் தூத்துக்குடிக்கு போதிய ரயில் சேவை வசதியைத் தராமல் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக வான்வழி, கடல் வழி, சாலை வழி, ரயில் வழி ஆகிய நான்கு வகையான போக்குவரத்து வசதியைக் கொண்ட துறைமுக நகரமான தூத்துக்குடி, தொழில் வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே வருகிறது. ஆனால், முன்னேற்றத்துக்கு ஏற்ப போதிய ரயில் வசதி இல்லை என்ற குறைபாடு இருக்கிறது.

தூத்துக்குடியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு மட்டுமே தலா ஒரு விரைவு ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, தூத்துக்குடி- திருநெல்வேலி இடையே ஒரு பயணிகள் ரயிலும், தூத்துக்குடி- ஓகா இடையே வாராந்திர ரயிலும் இயக்கப்படுகிறது.

தூங்காமல் பயணம்: வர்த்தக நகரங்களான தூத்துக்குடியையும் கோவையையும் இணைக்கும் வகையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2011-ஆம் ஆண்டு தூத்துக்குடி- கோவை இடையே ஒரு லிங்க் (பிணைப்பு) ரயில் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில், 7 பெட்டிகள் தூத்துக்குடியில் இருந்து கொண்டுசெல்லப்பட்டு மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து பிணைக்கப்படும். 2012-ஆம் ஆண்டுமுதல் 2020-ஆம் ஆண்டு வரை 7 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் மூலம் தினமும் 600 பேர் வரை பயன்பெற்று வந்தனர்.

ADVERTISEMENT

கரோனா பரவல் காலத்தில் ரத்து செய்யப்பட்ட இந்த ரயில் தற்போது (ஜூலை 2 முதல்) இணைப்பு ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டுச் சென்று மணியாச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருந்து, நாகர்கோவிலில் இருந்து வரும் விரைவு ரயிலில் இரவு 11.30 மணிக்கு ஏற வேண்டும். மறு வழித்தடத்தில் கோவையில் இருந்து - தூத்துக்குடிக்கு வரும் பயணிகள் அதிகாலை 2.40 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையத்தில் இறங்கி, தூத்துக்குடி வரும் ரயிலுக்கு மாற வேண்டும். இதனால் பயணிகள் இரவு முழுவதும் தூங்காமல் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிணைப்பு ரயில் அல்லது புதிய ரயில்: தூத்துக்குடி-கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டபோது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் தினமும் ஏறத்தாழ 300 பேர் வரை பயணம் செய்தனர். ஆனால், தற்போது அதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் நலச் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலர் மா. பிரம்மநாயகம் கூறியது: கேரளத்தில் பிணைப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வந்த ரயில்கள், தற்போது தனி ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல, தூத்துக்குடி - கோவை இடையே இரவு நேரத்தில் தனி ரயில் இயக்கப்பட வேண்டும் அல்லது தனி ரயில் இயக்கப்படும் வரை பழைய மாதிரி தூத்துக்குடி - கோவை இடையே பிணைப்பு ரயிலை இயக்கினால் மட்டுமே மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.

வியாபாரி கே.ராமச்சந்திரன் கூறியது: தொழில் நகரமான தூத்துக்குடி, மற்றொரு தொழில் நகரமான கோயம்புத்தூருடன் கொண்டிருந்த இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருப்போர் கோவைக்கான ரயில் சேவையைப் பெற முடியாமல் தவிக்கும் விவகாரத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் குரல் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலர் தா. ராஜா கூறியது: நள்ளிரவு நேரத்தில் இணைப்பு ரயிலுக்கு மாற வேண்டும் என்பதால் பயணிகள் இரவு முழுவதும் தூங்காமல் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மேலும், தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் மணியாச்சியில் இருந்து கோவை செல்ல முன்பதிவு பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

சாதாரண மக்களைப் பாதிக்கும் இந்த இணைப்பு ரயில் திட்டத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் கைவிட்டு, மீண்டும் லிங்க் (பிணைப்பு) ரயிலையே இயக்க வேண்டும் அல்லது தூத்துக்குடி - கோயம்புத்தூர் இடையே புதிய ரயில் இயக்க வேண்டும்.

தெற்கு ரயில்வேயின் தூத்துக்குடி நகர மக்கள் விரோதப் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. பழைய மாதிரி லிங்க் ரயிலை இயக்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

குரல் கொடுப்பார்களா மக்கள் பிரதிநிதிகள்?

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் தொடர்ந்து அதிக வருவாயை தூத்துக்குடி ஈட்டி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் தடுப்புக் காலத்தில் சரக்கு ரயில்கள் மூலம் அதிகளவு வருவாய் ரயில்வே நிர்வாகத்துக்கு கிடைத்தது.

ஆனால், பயணிகள் ரயில் விவகாரத்தில் தொடர்ந்து தூத்துக்குடி புறக்கணிக்கப்பட்டே வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடியில் இருந்து தினமும் நேரடியாக இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவது மக்களைப் பாதிக்கும் சூழலை உருவாக்கி உள்ளது.

கோவை ரயில் விவகாரத்தில் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும், அதிக வருவாய் ஈட்டித் தரும் தூத்துக்குடி மக்களுக்கு கூடுதல் ரயில் சேவை வசதியைப் பெற்றுத் தர மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT