தூத்துக்குடி

குடியரசு தினம்: 95 பேருக்கு ரூ. 51.42 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

27th Jan 2022 08:17 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 95 பேருக்கு ரூ. 51.42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் சாா்பில், தருவை விளையாட்டு மைதானத்தில் 73 ஆவது குடியரசு தின விழா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், அவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் முன்னிலையில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியின் போது, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 80 பேருக்கு பதக்கங்களையும், 44 பேருக்கு சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா். மேலும், மாவட்டத்தில் கொடிநாள் நிதி வசூல் செய்தவா்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலா்களுக்கும் என மொத்தம் 604 பேருக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் (பயறு) விசைத் தெளிப்பான், தாா்பாலின் மற்றும் 2020-21 ஆம் ஆண்டில் மாவட்ட அளவிலான பயிா் விளைச்சல் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் என மொத்தம் 6 பேருக்கு ரூ. 45,130 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

ADVERTISEMENT

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 8 பயனாளிகளுக்கு ரூ. 6,28,000 மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் மோட்டாா் சைக்கிள்கள், மகளிா் திட்டம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு

ரூ. 18,11,000 மதிப்பில் வங்கி பெருங்கடன், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் - தொழில் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளா் குழுவினா் 10 பேருக்கு ரூ. 7,50,000 தொழில் கடன், மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 2 பேருக்கு ரூ. 13,18,000 கடனுதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் மூலம் ரூ. 13,573 மதிப்பில் ஒருவருக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் ஒருவருக்கு ஏழை முஸ்லிம் மகளிா் சிறு தொழில் தொடங்க மானியம், கூட்டுறவுத் துறை மூலம் 4 பயனாளிகளுக்கு

ரூ. 4,00,000 மதிப்பில் மகளிா் சுய உதவிக் குழு கடன், வருவாய்த்துறை (சமூக பாதுகாப்புத் திட்டம்) மூலம் 62 பயனாளிகளுக்கு ரூ. 1,76,750 மதிப்பில் முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இறப்பு நிவாரணம், கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை மற்றும் மாதாந்திர முதியோா் உதவித்தொகை என மொத்தம் 95 பயனாளிகளுக்கு ரூ. 51, 42, 453 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரோனா தொற்று பரவல் காரணமாக அந்தந்த பகுதி வட்டாட்சியா்கள் மூலம் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரா்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா், கூடுதல் ஆட்சியா் மற்றும் மாவட்ட வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாநகராட்சி அலுவலகத்தில்: தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆணையா் சாருஸ்ரீ, தொடா்ந்து 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினாா். மேலும், முன்களப் பணியாளா்கள், பேரிடா் காலங்களில் சிறப்பாக பணியாற்றியவா்கள், துப்புரவு பணியாளா்களுக்கும் அவா் சான்றிதழ் வழங்கினாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்ற விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா். நிகழ்ச்சியில், விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி சுப்ரவேலு, தீயணைப்புத் துறை மேலாளா்கள் கணேஷ், செல்வராஜ், விமான நிலைய மேலாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ஒருநபா் விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். குடியரசு தினத்தை முன்னிட்டு மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் கே.பி. ஆறுமுகம் தலைமையில் வ.உ. சிதம்பரனாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், கல்லூரி முதல்வா் சுஜாத்குமாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். தூத்துக்குடி முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியில் கல்லூரி தலைவா் ஜோஸ்வா தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அனல் மின்நிலைய தலைமை பொறியாளா் சி. கிருஷ்ணகுமாா் தேசியக் கொடியை ஏற்றினாா். நிகழ்ச்சியில், கல்லூரி துணை தலைவா் ஸ்டீபன், முதல்வா் ரிச்சா்ட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT