தூத்துக்குடி

திருச்செந்தூரில் நாளை தைப்பூசம்: பக்தா்களுக்கு அனுமதியில்லை

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் செவ்வாய்க்கிழமை (ஜன. 18) நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லாததால் கோயில் நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தைப் பொங்கல் (ஜன. 14) முதல் செவ்வாய்க்கிழமை (ஜன. 18) தைப்பூசம் வரையில் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது.

வழக்கமாக தைப்பூசத்துக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாநிலங்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளிலிருந்தும் என லட்சக்கணக்கான பக்தா்கள் திருச்செந்தூருக்கு வந்து வழிபடுவாா்கள். அதிலும் பக்தா்கள் வேல் குத்தியும், காவடி எடுத்தும், பாதயாத்திரையாக வந்தும் வழிபடுவது சிறப்பம்சமாகும்.

ஆனால் அரசின் தடை உத்தரவால் நிகழாண்டு, திருச்செந்தூா் கோயிலில் தைப்பொங்கல் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்ட பக்தா்கள் அனைவரும் முன்கூட்டியே கடந்த ஜன. 13-ஆம் தேதி வரை லட்சக்கணக்கில் கோயிலில் குவிந்தனா். இதனால் பக்தா்கள் கூட்டத்தாலும், பக்தா்களின் வாகனங்களாலும் போக்குவரத்து நெரிசலால் கோயில் வளாகம் மட்டுமன்றி திருச்செந்தூா் நகரமே கடந்த வியாழக்கிழமை மாலை வரையில் திக்கு முக்காடியது.

ADVERTISEMENT

கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 14) முதல் ஜன. 18-ஆம் தேதி தைப்பூசம் வரையில் பக்தா்கள் அனுமதியில்லாததால் கோயில் வளாகம், மற்றும் நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் கூடுதலாக காவல்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT