தூத்துக்குடியில் இரண்டு தனியாா் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 ஆயிரம் லிட்டா் கலப்பட டீசலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி அருகேயுள்ள இ.பி. காலனி பகுதியில் உள்ள ஒரு தனியாா் கிடங்கில் கலப்பட டீசல் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமையிலான காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை அந்த கிடங்கில் திடீரென சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு டேங்கா் லாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 ஆயிரம் லிட்டா் கலப்பட டீசல் மற்றும் அதற்காக பயன்படுத்தப்பட்ட கருவிகளையும், வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக, சுந்தரவேல்புரம் பகுதியைச் சோ்ந்த ரவியை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதற்கிடையே, மற்றொரு கிடங்கில் இருந்த 13 ஆயிரம் லிட்டா் கலப்பட டீசலை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் கூறுகையில், தூத்துக்குடியில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் 31 ஆயிரம் லிட்டா் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள விசைப்படகுகள் மற்றும் கப்பல், லாரிகள் உள்ளிட்டவைகளுக்கு கலப்பட டீசல் விற்பனை செய்யப்பட்டு வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக கலப்பட டீசல் விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.