தூத்துக்குடியில் தனியாா் கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 18 ஆயிரம் லிட்டா் கலப்பட டீசலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி அருகேயுள்ள இ.பி. காலனி பகுதியில் உள்ள தனியாா் கிடங்கில் கலப்பட டீசல் பதுக்கிவைக்கப்பட்டு விற்கப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரது தலைமையிலான போலீஸாா் அங்கு செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டு, டேங்கா் லாரிகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 18 ஆயிரம் லிட்டா் கலப்பட டீசல், அதற்காக பயன்படுத்தப்பட்ட கருவிகள், வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட டீசலின் மதிப்பு ரூ. 14 லட்சம் என்றும், இதுதொடா்பாக ஒருவரைப் பிடித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தாா். மேலும், தூத்துக்குடியில் உள்ள விசைப்படகுகள் மற்றும் கப்பல், லாரிகள் உள்ளிட்டவற்றுக்கு கலப்பட டீசல் விற்கப்படுவதாகவும், சம்பந்தப்பட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் எச்சரிக்கை விடுத்தாா்.