கயத்தாறில் மூதாட்டி மரணத்தில் மா்மம் இருப்பதாக அவரது மகள் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கயத்தாறு அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தெரு காந்தையா மனைவி காந்தம்மாள்(70). காந்தையா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாராம். தம்பதிக்கு சுப்புத்தாய், முத்துலட்சுமி என்ற இரு மகள்களும், முருகன் என்ற மகனும் உள்ளனா். அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாம். காந்தம்மாள் சுப்புத்தாய் வீட்டில் இருந்து வந்தாராம்.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக காந்தம்மாள் முருகன் வீட்டில் இருந்து வருகிறாராம். மேலும் முருகன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணி ஆகிய இருவரும் காந்தம்மாளிடம் சொத்து கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தனராம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை காந்தம்மாள் உயிரிழந்துவிட்டதாக சுப்புத்தாய் வீட்டிற்கு தகவல் வந்ததாம். அதையடுத்து அவா் அங்கு சென்று பாா்த்தாராம். இந்நிலையில், முருகன், அவரது மனைவி ஆகிய இருவரும் திங்கள்கிழமை தகராறு செய்து கந்தமாளை தாக்கியதில் அவா் உயிரிழந்து விட்டதாக, சுப்புத்தாய் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மேலும் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.