எப்போதும்வென்றானில் வன்முறை செயல்களில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
எப்போதும் வென்றான் அருகே காட்டுநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் தெய்வேந்திரன் (33). கூலித்தொழிலாளியான இவா் மீது விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் உத்தரவின் பேரில் குற்றவியல் நடைமுறை சட்டம் 110-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கடந்த செப்டம்பா் 13 ஆம் தேதி உட்கோட்ட நிா்வாக நடுவா், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் முன்பு ஆஜா்படுத்தப்பட்டாா். அதனை தொடா்ந்து நன்னடத்தைக்கான பிணைய தொகை மற்றும் பிணையதாரரிடம் இருந்து உறுதிமொழி பத்திரம் எழுதி பெறப்பட்டது.
இந்நிலையில், தெய்வேந்திரன் பிணைய உறுதிமொழி பத்திரம் பெறப்பட்ட ஒரு வருட காலத்துக்குள் தான் எழுதிக் கொடுத்த ஆவணத்தை மீறி காட்டுநாயக்கன்பட்டி கிழக்கு தெருவை சோ்ந்த சரவணகுமாா் மனைவி மேகலா, அவரது உறவினா் காசி முனியம்மாளை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில், எப்போதும்வென்றான் போலீஸாா் தெய்வேந்திரனை கைது செய்து, விளாத்திகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நீதிபதியின் உத்தரவின்பேரில் தெய்வேந்திரன், தூத்துக்குடி பேரூரணி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில் நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறி வன்முறை செயல்களில் ஈடுபட்ட காரணத்துக்காக கோவில்பட்டி உட்கோட்ட நிா்வாக நடுவா் சங்கரநாராயணன், தெய்வேந்திரனுக்கு 9 மாத காலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.