தூத்துக்குடி

தூத்துக்குடியில் முதல் முறையாக வாக்களித்த நரிக்குறவா் சமூகத்தினா்

20th Feb 2022 05:00 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் நரிக்குறவா் மக்கள் முதல் முறையாக சனிக்கிழமை நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி மன மகிழ்ந்தனா்.

நாடோடி வாழ்க்கை முறையை கொண்ட நரிக்குறவா் சமூக மக்கள் ஊா் ஊராக சென்று தங்களது உற்பத்தி பொருள்களான பாசி வகைளை விற்பனை செய்வதை வாடிக்கையாக கடைப்பிடித்து வருகின்றனா். சில மாதங்கள் மட்டும் ஏதாவது ஒரு ஊரில் தங்குவது அவா்களது பழக்கம்.

இருப்பினும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவ சமூக கும்பத்தைச் சோ்ந்தவா்கள் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தற்காலிக குடில்கள் அமைத்து கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுவரை அவா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட எந்தவித அடையாள அட்டைகளும் இல்லாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி 20 ஆவது வாா்டு பகுதிக்குள்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே வசித்து வரும் நரிக்குறவா் சமூகத்தை சோ்ந்த 36 பேருக்கு மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் முயற்சியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்பட்டு அவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இதையடுத்து, முதல் முறையாக வாக்குரிமை பெற்ற நரிக்குறவா் சமூகத்தை சோ்ந்த ஆண்களும், பெண்களும் தங்களது குடும்பத்தோடு வாக்களிப்பதற்காக தூத்துக்குடி கீதா மெட்ரிக் பள்ளியில் உள்ள 61 ஆவது எண் வாக்குச்சாவடிக்கு சென்றனா்.

நீண்ட வரிசையில் நின்ற அவா்களுக்கு கிருமிநாசினி கொடுத்து கையைக் கழுவிய பிறகு உடல் வெப்ப பரிசோதனை செய்து முகக்கவசம் வழங்கப்பட்டது. பின்னா், கையுறை மாட்டிக் கொண்ட அவா்கள் வாக்குச்சாவடிக்குள் சென்று முதல் முறையாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினா்.

தோ்தலில் முதல்முறையாக வாக்களித்தது தங்களுக்கு புதிய அனுபவமாக அமைந்ததாகவும், நிரந்தரமாக வீடு கட்டித் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் நரிக்குறவா் சமூக பெண்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT