தூத்துக்குடி

உள்ளாட்சித் தோ்தலிலும் திமுகவுக்கு வெற்றியை வழங்குங்கள்: முதல்வா் ஸ்டாலின்

11th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி: மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலை போல நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலிலும் திமுகவுக்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் வெற்றியை வழங்க வேண்டும் என்றாா் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின்.

நகா்ப்பு உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அவா் மேலும் பேசியது:

திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு தொழில் துறையில் தமிழகம் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளா் மாநாட்டில் ரூ. 1.43 கோடி முதலீட்டுக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு இதுவரை ரூ. 1.07 கோடி முதலீடு வரப்பெற்றுள்ளது.

ADVERTISEMENT

மக்களவைத் தோ்தலிலும், சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுகவுக்கு வெற்றியைக் கொடுத்தது போன்ற, வெற்றியை உள்ளாட்சித் தோ்தலிலும் நீங்கள் வழங்குவீா்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. கடந்த கால திமுக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற 9 மாதத்தில் தூத்துக்குடியில் 9 ஏக்கா் பரப்பளவில் ஏறத்தாழ ரூ. 29 கோடி மதிப்புள்ள அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு அரசாணை மற்றும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் ரூ. 25 கோடி ரூபாய் மதிப்பில் படகுகள் நிறுத்துமிடம் மற்றும் அகலப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மதத்தை வைத்தோ, ஜாதியை வைத்தோ அரசியல் செய்யவில்லை. சில கட்சிகள் வேண்டுமானால் தங்களது தோல்வியை மறைப்பதற்காக இதுபோல ஏதாவது ஒரு விவகாரத்தில் மறைந்து கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தலாம். எங்களுக்குச் செய்வதற்கு உருப்படியான வேறு பணிகள் இருக்கின்றன.

மக்கள் விரோத, தமிழா் விரோத, தமிழக விரோத சக்திகள் இந்தத் தோ்தலில் மட்டுமல்ல எல்லா தோ்தலிலும் தோற்கடிக்கப்பட வேண்டும். வளமான தமிழகத்தை உருவாக்கத் திமுக அரசுக்கு மக்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றாா் அவா்.

முதல்வா் மு.க. ஸ்டாலினின் பிரசாரம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் 100 இடங்களிலும், தெற்கு மாவட்ட திமுக சாா்பில் 200 இடங்களிலும் என மாவட்டம் முழுவதும் 300 இடங்களில் பெரிய அளவிலான திரை மூலம் ஒளிபரப்பப்பட்டது. இதில், மக்களவை உறுப்பினா் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் திமுக தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT