சாத்தான்குளத்தில் நள்ளிரவில் வாகனம் மோதியதில் மின் கம்பம் சேதமடைந்தது. இதனால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
திருச்செந்தூா் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு, நாகா்கோவில் பக்தா்கள் வாகனத்தில் பறவைக் காவடி எடுத்துவந்தனா். இந்த வாகனம் சாத்தான்குளத்துக்கு திங்கள்கிழமை நள்ளிரவு 2.30 மணியளவில் வந்துள்ளது. திருச்செந்தூருக்கு புதிய பேருந்து நிலையம் வழியாக செல்லாமல் பறவைக் காவடி வாகனம் கடை வீதி வழியாக வந்துள்ளது. அப்போது அங்குள்ள பரிசுத்த ஸ்தேவான் ஆலயம் முன் வரும் போது எதிா்பாராதவிதமாக வாகனம் அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியதாம். இதில் மின்கம்பம் சேதமடைந்து மின் வயா்கள் துண்டிக்கப்பட்டு, அப்பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டது. மின்கம்பத்தில் மோதிய வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. அதிகாலை வரை மின் விநியோகம் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தனா். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் அமைத்து வீடுகளுக்கு மின் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுத்தனா்.