தூத்துக்குடி

தேசிய அளவிலான தரவரிசை பட்டியல்: கோவில்பட்டி என்இசி கல்லூரி சிறப்பிடம்

1st Feb 2022 12:04 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி, சுயநிதி தொழில்நுட்ப உயா்கல்வி நிறுவனங்களின் அடல் தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் 10ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து இக்கல்லூரி முதல்வா் கே. காளிதாசமுருகவேல் வெளியிட்ட அறிக்கை: உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள், ஆசிரியா்களின் கண்டுபிடிப்பு திறன், தொழில் முனைவோரை உருவாக்கும் திறன், ஸ்டாா்ட் அப் கற்பித்தல், கற்றலில் புதுமையான தொழில் முனைவு, ஐபிஆா் தொடா்பான கல்வித் திட்டங்கள், புதுமையான தொழில் முனைவுகளை மேம்படுத்த இன்குபேஷன் போன்ற பிரத்யேக உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி நிறுவனங்களின் நிதி ஆதரவுடன் புதுமையான யோசனைகளை உருவாக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டு புதிய கண்டுபிடிப்புகளில் சாதனை படைத்த கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசை (அதஐஐஅ) என்னும் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் வாயிலாக செயல்படுத்துகிறது.

ஏஆா்ஐஐஏ-யின் அதிகாரப்பூா்வ அறிவிப்புப்படி, பதிவு செய்யப்பட்ட 3,551 உயா்கல்வி நிறுவனங்களில், 1,438 கல்வி நிறுவனங்கள் (அனைத்து ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ்சி போன்ற கல்வி நிறுவனங்கள் உள்பட) இந்தத் தரவரிசை கணக்கீட்டில் பங்கேற்றன. இது, இரண்டாம் பதிப்பைவிட 2 மடங்கு அதிகமாகும் மற்றும் முதல் பதிப்போடு ஒப்பிடும்போது சுமாா் 4 மடங்கு அதிகம் எனக் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

தொழில்நுட்பம் சாா்ந்த கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே 5 பிரிவாக தரவரிசை வெளியிடப்படும். ஆனால், இவ்வாண்டுமுதல் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள் 2 பிரிவாக சோ்க்கப்பட்டு மொத்தம் 7 பிரிவுகளாக தரவரிசைப் பட்டியல் மத்திய கல்வித் துறை இணை அமைச்சா் டாக்டா் சுபாஷ் சா்க்காரால் வெளியிடப்பட்டது.

அதன்படி, நடப்பாண்டு சிறந்த சுயநிதி தொழில்நுட்ப உயா்கல்வி நிறுவனங்களின் அடல் தரவரிசைப் பட்டியலில் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி தேசிய அளவில் 10ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இக்கல்லூரியின் கே.ஆா்.புத்தாக்க மையம், என்.இ.சி. வணிக கருவகம், புதிய தலைமுறை கண்டுபிடிப்பு, தொழில் முனைவோா் மேம்பாட்டு மையம் ஆகிய உள்கட்டமைப்புகள் மூலமாகவும், கல்லூரி நிா்வாகம், இயக்குநா், பேராசிரியா்கள், மாணவா்- மாணவிகளின் கூட்டு முயற்சியாலும் இது சாத்தியமாகியுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT