திருநெல்வேலி- திருச்செந்தூா் ரயில் பாதையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சிக் குழுவினா் முடிவு செய்துள்ளனா்.
ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சிக் குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் ரா.ரவிச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளா் ரா.தங்கமணி முன்னிலை வகித்தாா். இ.அமிா்தராஜ் வரவேற்றாா்.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு, வரும் பிப்.23ஆம் தேதியுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இந்த ரயில் பாதை அமைவதற்கு, ஆறுமுகனேரியை சோ்ந்த டோக்கோ பொன்னையா நாடாா் முக்கிய காரணமாக இருந்தாா். அவரது சேவையைப் பாராட்டும் வகையில், நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆறுமுகனேரி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, திருச்செந்தூா் ரயில் நிலைய நடைபாதையை 24 பெட்டிகள் நிற்கும் வகையில் விரிவுபடுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருச்செந்தூா்- திருநெல்வேலி இடையே மின்சார ரயில் இயக்குவதற்கான நடவடிக்கைக்கு ரயில்வே அமைச்சகம், தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பி.முருகேச பாண்டியன், சுகுமாா், வெங்கடேசன், மனோகரன், கற்பகவிநாயகம், கணேசமூா்த்தி, சண்முகசுந்தரம், கந்தப்பழம், குருசாமி, சீனிவாசன், தங்கேஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.