தூத்துக்குடி

தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் நடைப்பயணம் தொடக்கம்

4th Dec 2022 03:01 AM

ADVERTISEMENT

தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் 2 நாள் நடைப்பயணம் கோவில்பட்டியில் சனிக்கிழமை தொடங்கியது.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரி கோவில்பட்டியிலிருந்து தூத்துக்குடிக்கு 2 நாள் நடைப்பயணம் நடைபெறும் என, அக்கட்சியினா் அறிவித்திருந்தனா். அதன்படி, கோவில்பட்டி பயணியா் விடுதி முன் தொடங்கிய நடைப்பயணத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் சீனிவாசன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஜோதிபாசு, ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலக்குழு உறுப்பினா் அா்ஜுனன் நடைப்பயணத்தைத் தொடக்கிவைத்தாா்.

தமிழகம் முழுவதும் லைட்டா்களை தடை செய்து, தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்க வேண்டும். கோவில்பட்டியில் பழுதான சாலை, வாருகால்களை சீரமைக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை நகா்ப்புறப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

மாவட்டக்குழு உறுப்பினா்கள் கிருஷ்ணவேணி, மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரவீந்திரன், ஒன்றியச் செயலா் சாலமன்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூா் வழியாக நடைபயணம் தூத்துக்குடியை ஞாயிற்றுக்கிழமை சென்றடையும். அங்கு சிதம்பரநகா் பேருந்து நிறுத்தத்தில் இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT