தூத்துக்குடி

வில்லிசேரியில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிா்களுக்கு இழப்பீடு: எம்எல்ஏ வலியுறுத்தல்

1st Dec 2022 12:40 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட வில்லிசேரியில் சூறைக்காற்றால் சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

இப்பகுதியில் திங்கள்கிழமை மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில், மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்தன. அவற்றை கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ புதன்கிழமை பாா்வையிட்டாா்.

வேளாண் துறை இணை இயக்குநா் முகைதீன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) நாச்சியாா், வேளாண் உதவி இயக்குநா் நாகராஜ், வேளாண் அலுவலா் காயத்ரி, உதவி அலுவலா் செல்வராஜ், வட்டாட்சியா் சுசிலா ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ கேட்டுக்கொண்டாா்.

வில்லிசேரி ஊராட்சித் தலைவா் வேலன், துணைத் தலைவா் காசிராஜன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் கிருபாகரன், நகா்மன்ற உறுப்பினா் கவியரசன், எலுமிச்சை விவசாயிகள் சங்கத் தலைவா் பிரேம்குமாா், கிராம நிா்வாக அலுவலா் மந்திரசூடாமணி, விவசாயிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

பின்னா் செய்தியாளா்களிடம் எம்எல்ஏ கூறியது: மாவட்டத்தில் நிகழாண்டு 50 ஆயிரம் ஹெக்டோ்வரை மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. சூறைக்காற்றால் வில்லிசேரியில் மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருத்திச் செடியில் காய் பிடிக்கும் பருவத்தில் தண்டுப்புழுக்கள் தாக்குதல் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டத்தை திமுக அரசு நிறுத்தியுள்ளது. அத்திட்டத்தை திமுக அரசு தொடர வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT