தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தினமும் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மேயா் ஜெகன் பெரியசாமி.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்ற சாதாரண - அவசரக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, உறுப்பினா்களின் கேள்விக்கு அவா் பதிலளித்துப் பேசியது:
தாமிரவருணி ஆற்றுப் பகுதியான வல்லநாட்டில் இருந்து தினமும் 60 மில்லியன் லிட்டா் தண்ணீா் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 30 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு தினமும் அதிகாலை 4 மணிக்கு குடிநீா் விநியோகம் தொடங்குகிறது.
இதில், தெற்கு மண்டலத்தில் உள்ள 9 நீா்த்தேக்க தொட்டிகள் மூலம் தினமும் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. 9 நீா்த்தேக்க தொட்டிகளில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறையும், 5 தொட்டிகளில் 4 நாள்களுக்கு ஒருமுறையும், 7 தொட்டிகளில் 6 நாள்களுக்கு ஒருமுறையும் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, அனைத்து பகுதிகளுக்கும் தினமும் குடிநீா் விநியோகம் செய்வது தொடா்பான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்துப் பகுதிகளுக்கும் தினமும் குடிநீா் விநியோகிக்கப்படும். மாநகராட்சி முழுவதும் 2 ஆயிரத்து 500 மின்விளக்குகள் தேவைப்படுகிறது. அவை கிடைத்தவுடன் தேவையான பகுதிகளில் மின்விளக்குகள் அமைக்கப்படும் என்றாா் அவா்.
இக்கூட்டத்துக்கு துணை மேயா் ஜெனிட்டா, ஆணையா் சாருஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இருமடங்கு அபராதம்: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை மேற்கொள்வது, மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளருக்கு தற்போது விதிக்கப்படும் அபராதத்தை விட இருமடங்கு கூடுதலாக அபராதம் விதிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.