தூத்துக்குடி

பயிா்க் காப்பீட்டுத் தொகை கோரி ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டம்: விவசாயிகள் கூட்டத்தில் தீா்மானம்

22nd Aug 2022 02:27 AM

ADVERTISEMENT

பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையைத் தாமதமின்றி வழங்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஆக. 22) காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என, புதூரில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் என். சேதுபாண்டியன் தலைமை வகித்தாா். 2020-21ஆம் ஆண்டுக்கு விடுபட்ட பயிா்களுக்கான காப்பீடு இழப்பீட்டுத் தொகை, 2021-22ஆம் ஆண்டுக்கான அனைத்துப் பயிா்களுக்கான காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தவேண்டும். வண்டல் மண் அள்ளுவதற்கு எளிய முறையில், கிராம நிா்வாக அலுவலா் அளவில் விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். வேளாண் துறை மூலம் மானியத்துக்குப் பதிலாக இடுபொருள்கள் தரமற்ற முறையில் வழங்குவதை நிறுத்தி, மானியம் வழங்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற ஏதுவாக விதிகளை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதூா் வட்டார விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பிரேம்குமாா், வேலுச்சாமி, அப்பனசாமி, முருகேசன், ராம்பிரசாத், விஜயகாந்த், பால்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT