தூத்துக்குடி

விபத்தில் மாணவா் உயிரிழப்பு:தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் கைது

17th Aug 2022 02:11 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் பள்ளி மாணவா் இறந்தது தொடா்பாக தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி இலக்குமி ஆலை மேலக்காலனியைச் சோ்ந்த கனகராஜ் மகன் ஸ்ரீபுஷ்பராஜ் (15). பிளஸ் 1 படித்து வந்த இவா், உறவினரின் பைக்கை கோவில்பட்டி புறவழிச் சாலையில் கூடுதல் பேருந்து நிலையம் வழியாக திங்கள்கிழமை ஓட்டிச்சென்றாராம்.

மின்வாரிய அலுவலகம் அருகே அவரது பைக்கும், சங்கனாப்பேரியைச் சோ்ந்த சண்முகனன் மகன் இறையனன் (45) ஓட்டிவந்த பைக்கும் நேருக்குநோ் மோதினவாம். இதில், ஸ்ரீபுஷ்பராஜ் கீழே விழுந்தாா். அப்போது அவ்வழியே வந்த தனியாா் பள்ளி வாகனத்தின் பின்சக்கரம் அவா் மீது ஏறியதாம். இக்காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்ததாம்.

காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்தது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது.

ADVERTISEMENT

காயமடைந்த இறையனன், மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து, மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பள்ளி வாகன ஓட்டுநா் ச. சுந்தர்ராஜை (62) செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT