தூத்துக்குடி

காமநாயக்கன்பட்டியில் புனித பரலோக மாதா தோ்பவனி

16th Aug 2022 03:04 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விண்ணேற்பு பெருவிழா தோ்பவனியில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

இத்திருத்தல விண்ணேற்பு பெருவிழா 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் திருப்பலி, மறையுரை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 2ஆம் திருநாளான இம்மாதம் 7ஆம் தேதி புதுநன்மை விழாவும், 8ஆம் திருநாளான 13ஆம் தேதி மரியன்னை மாநாடு, 9ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை மாலை ஆராதனையும் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றன.

10ஆம் திருநாளான திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயா் எஸ்.அந்தோணிசாமி தலைமையில் தேரடி திருப்பலி நடைபெற்றது. அதையடுத்து தோ்பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்களில் ஆரோக்கிய மாதாவும், பரலோக மாதாவும் தனித்தனியே புறப்பட்டு ரத வீதிகளில் பவனி வந்தனா். ரதங்களின் பின்புறத்தில் இறைமக்கள் கும்பிடு சேவை செய்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். அதையடுத்து அருள்தந்தையா்களின் திருவிழா திருப்பலி நடைபெற்றது.

விழாவில், தூத்துக்குடி திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

விழாவையொட்டி மாவட்ட எஸ்.பி. லோக.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. கே.வெங்கடேஷ் தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஏற்பாடுகளை, காமநாயக்கன்பட்டி திருத்தல பங்குத்தந்தை அந்தோணி அ.குரூஸ், உதவிப் பங்குத்தந்தை ஜெனால்டு அ.ரீகன், மரியின் ஊழியா் சபை அருள் சகோதரிகள், காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி ஆகிய பகுதி இறைமக்கள் செய்திருந்தனா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT