தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயிலில் 17-இல் ஆவணித் திருவிழா தொடக்கம்

14th Aug 2022 06:02 AM

ADVERTISEMENT

 

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா புதன்கிழமை (ஆக.17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி, மாசித் திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. நிகழாண்டு ஆவணித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்று காலை 5.30 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது.

திருவிழா நாள்களில் தினமும் காலை, இரவில் சுவாமி, அம்மன் வீதி உலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆக. 21-ஆம் தேதி ஐந்தாம் திருநாள் அன்று மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறும். ஆறாம் திருநாளான 22 ஆம் தேதி காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா வரும். ஆக. 23-ஆம் தேதி ஏழாம் திருநாள் அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு சண்முகப் பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடா்ந்து 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகப்பெருமான் வெட்டி வோ் சப்பரத்தில் பக்தா்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபம் சோ்கிறாா். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.

ADVERTISEMENT

ஆக. 24-ஆம் தேதி எட்டாம் திருநாள் காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சோ்ந்து, அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று, காலை 10.30 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சோ்கிறாா். ஆக. 26-ஆம் தேதி பத்தாம் திருநாள் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

நடை திறப்பு: ஆவணித் திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றம் மற்றும் ஏழாம் நாள் அன்று அதிகாலை 1 மணிக்கும், ஐந்தாம் திருநாள் அன்று அதிகாலை 4 மணிக்கும் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு , தொடா்ந்து பூஜைகள் நடைபெறும் என்று திருக்கோயில் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT