தூத்துக்குடி

எட்டயபுரத்தில் மத்திய அரசின் சார்பில் சுதந்திர தின அமுதப் பெருவிழா 

12th Aug 2022 04:39 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மத்திய அரசின் சார்பில் சுதந்திர தின அமுதப் பெருவிழா  இன்று கொண்டாடப்பட்டது. 

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா ஆண்டு முழுவதும் கொண்டாடும் விதமாக மத்திய அரசின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பின்படி,  நாடு முழுவதும் 75 மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டு  சுதந்திரத்திற்காக பாடுபட்ட  எண்ணற்ற தியாகிகள் தலைவர்கள் கவுரவப்படுத்தப்பட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் மகாகவி பாரதியார், வ உ சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், மாவீரன் வெள்ளையத்தேவன் உள்ளிட்ட  சுதந்திர போராட்ட தியாகிகள் நிறைந்த  தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மத்திய அரசின் சார்பில் சுதந்திர தின அமுதப் பெருவிழா இன்று கொண்டாடப்பட்டது. 

ADVERTISEMENT

எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபம் மற்றும் பாரதியார் பிறந்த இல்லத்தில் நடைபெற்ற 75-வது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு  மகாகவி பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதனைத் தொடர்ந்து பாரதியார் இல்லத்தில் உள்ள ஒளிப்பட காட்சிகளை பார்வையிட்டார். பின்னர் பாரதியார் வீடு அருகே  தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

தேசியக் கொடியின் பெருமை மற்றும் புகழை இன்றைய இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் விதமாக மூவர்ண தேசியக் கொடி ஒவ்வொரு வீடுகளிலும் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி எட்டயபுரத்து நகர வீதிகளில் தேசியக் கொடியுடன் அமைச்சர் எல்.முருகன் தலைமையில் பாஜகவினர்  ஊர்வலமாக வலம் வந்தனர்.

இதையும் படிக்க: ஆடி கடைவெள்ளி: பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

இந்நிகழ்ச்சியின் போது சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாகின் அபுபக்கர், எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், பேரூராட்சித் தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன்  மற்றும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT