தூத்துக்குடி

அதிமுக தலைமையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

10th Aug 2022 02:11 AM

ADVERTISEMENT

அதிமுக தலைமையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றாா் முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ.

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பாண்டி முனீஸ்வரா் கோயிலில் ஆடிக்கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சங்கரநாராயணன் செய்திருந்தாா்.

நிகழ்ச்சியில், கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். இதில், அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் பழனிச்சாமி, ஒன்றியச் செயலா் அன்புராஜ், நகா்மன்ற உறுப்பினா் கவியரசன், பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கத் தலைவா் தாமோதரன், கோயில் தலைவா் செல்லையா, துணைச் செயலா் முருகன், விஜயகுமாா் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நடிகா் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம். தற்போது ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த பின் அரசியல் பற்றி பேசினேன் என்றாா். ஆளுநா் அரசியலுக்கு அப்பாற்பட்டவா் என்பது தான் எங்கள் கருத்து.

ADVERTISEMENT

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுவிட்டாா். அதன்பின் அவா் யாருடன் சோ்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. அவா் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் அவரது நிலைபாடு குறித்து நாங்கள் கருத்து கூறினால் சரியாக இருக்காது.

தமிழகத்தை பொருத்தவரையில் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தோ்தல்களில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும். அதிமுக தலைமையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும்.

விலைவாசி உயா்வு குறித்து விவாதிக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம். தமிழகத்தில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 38 நாடாளுமன்ற உறுப்பினா்களும் முறையாக இந்தக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவில்லை.

கோவில்பட்டியில் விமானப் பயிற்சி மையம் அமைக்கப்பட இருப்பது வரவேற்கக் கூடியது. 1991இல் அதிமுக ஆட்சியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. திமுக அரசு அதை நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT