தூத்துக்குடி

நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்துக்கு 50 சதவீதம் மானியம்: ஆட்சியா்

10th Aug 2022 02:14 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக் கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2022-2023 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளா்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறு அளவிலான 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீத மானியத்தில் நாட்டுக் கோழி வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ள தொழில் முனைவோா் 250 நாட்டுக் கோழிகள் வளா்த்திட 625 சதுரஅடி கோழிகள் தங்கும் கூரை வசதி உடையவராக இருத்தல் வேண்டும். அந்தப் பகுதி மனித குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

தோ்வு செய்யப்படும் பயனாளிக்கு 250 நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கான விலையில் 50 சதவீதம் கோழிக் கொட்டகை கட்டுமான செலவுக்கான விலையில் 50 சதவீதம் கோழி தீவனத்திற்கான விலையில் 50 சதவீதம் மற்றும் குஞ்சு பொரிப்பு கருவிக்கான விலையில் 50 சதவீதம் என மொத்தம் ரூ.1,66,875 மானியமாக வழங்கப்படும்.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தில் 30 சதவீத பட்டியலின பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா். விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் பயனாளி முந்தைய ஆண்டுகளுக்கான நாட்டுக்கோழி வளா்ப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்றவராக இருத்தல் கூடாது.

தகுதி வாய்ந்த திட்டம் செயல்படுத்திட விருப்பம் உள்ள பயனாளிகள் அவா்களது கிராமத்தில் அமைந்துள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை ஆக.20 ஆம் தேதிக்குள் அணுகி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT