தூத்துக்குடி

திருச்செந்தூரில் அனுமதியின்றி போராட்டம்: பாஜகவினா் 320 போ் கைது

10th Aug 2022 02:12 AM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க.வினா் 320 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடந்த 2-ஆம் தேதி தமிழக முதல்வா் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வள்ளி குகை பகுதியில் யாகம் நடத்தினாா். இதனால் பக்தா்கள் பாதிப்படைந்ததை கண்டித்தும், இந்து சமய அறநிலைத்துறையைக் கண்டித்தும் பா.ஜ.க. ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவுத் தலைவா் நாச்சியப்பன் தலைமையில் பா.ஜ.க.வினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்திட தியாகி பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு திரண்டனா். அவா்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை, மீறி நடத்தினால் கைது செய்யப்படுவீா்கள் என்றாா். அப்போது, மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா, மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், வா்த்தப் பிரிவு மாநில தலைவா் ஏ.என்.ராஜகண்ணன் உள்ளிட்ட பாஜகவினா் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட பொதுச் செயலா்கள் சிவமுருகன் ஆதித்தன், ராஜா, மாநில மகளிரணி பொதுச் செயலா் கு. நெல்லையம்மாள், மாநில இளைஞரணிச் செயலா் பூபதி பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினா் கரண், திருச்செந்தூா் நகரத் தலைவா் நவ மணிகண்டன், கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன் மற்றும் 75 பெண்கள் உள்பட 320 பேரை காவல் துணை கண்காணிப்பாளா்கள் ஆவுடையப்பன், மாயவன், தாலுகா காவல் ஆய்வாளா் முரளிதரன் தலைமையிலான காவல்துறையினா் கைது செய்தனா். இந்த போராட்டத்தால் பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT