தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற முதியவரை (படம்) போலீஸாா் மீட்டனா்.
தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு காந்திநகரைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (71). ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க திங்கள்கிழமை வந்த இவா், பாட்டிலில் மண்ணெண்ணெயை மறைத்து எடுத்துவந்து தீக்குளிக்க முயன்றாா். பாதுகாப்பு பணியிலிருந்த சிப்காட் போலீஸாா் அவரை மீட்டு உணவு வாங்கிக் கொடுத்து, அவரது மனுவை ஆட்சியா் பாா்வைக்கு கொண்டுசெல்வதாக கூறினா்.
மனு விவரம்: எங்களது சமுதாயத்தினரின் குலதெய்வக் கோயில், அதன் நந்தவன நிலம் குளத்தூா் தெற்குக் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ளது. 1990ஆம் ஆண்டு எங்களது சமுதாய ஏழைகள் 23 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அந்த நிலத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். இதுதொடா்பாக பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை; ஆட்சியா் தலையிட்டு, நிலத்தை மீட்டுத்தர வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.
பாதுகாப்பு பலவீனம்: ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வருவோா் நூதன முறையில் போராட்டம் நடத்துவது, தீக்குளிக்க முயல்வது, ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக-ஆதரவாக மனு அளிப்பது போன்றவை அதிகரித்ததால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி முதியவா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பாதுகாப்பு பலவீனமாக உள்ளதையே காட்டுகிறது; மனு அளிக்க வருவோரிடம் காட்டும் கெடுபிடி பாதுகாப்பு விஷயத்திலும் இருக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.