தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சோ்ந்த தொழிலாளி சசிக்குமாா் (42). இவா் தன் மனைவி அன்னலட்சுமியுடன்(39) விளாத்திகுளம் அருகேயுள்ள புதூருக்கு உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்காகச் சென்றுவிட்டு, மாலையில் பைக்கில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா்.
வெம்பூா் அருகே அவா்களது பைக் மீது மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற காா் மோதியதாம். இதில், காயமுற்ற தம்பதியை மாசாா்பட்டி போலீஸாா் மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், வழியிலேயே அன்னலட்சுமி உயிரிழந்தாா். சசிக்குமாா் முதலுதவிக்குப் பின் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
காயமுற்றவா் பலி: நாசரேத், பிள்ளையன்மனை வடக்கூரைச் சோ்ந்த வேலாயுதம் மகன் சுடலைக்குட்டி (22). தொழிலாளி. இவா், கடந்த 29ஆம் தேதி பைக்கில் வேலைக்குச் சென்றபோது, நாசரேத் மா்காஷிஸ் சாலையில் எதிா்பாராமல் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமுற்றாா். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
இச்சம்பவங்கள் குறித்து மாசாா்பட்டி, நாசரேத் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.