கோவில்பட்டியையடுத்த லிங்கம்பட்டி ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
லிங்கம்பட்டி பகுதியில் வசிக்கும் வீடில்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி வருவாய் துறையிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததையடுத்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் பாஸ்கரன் தலைமையில், கிழக்கு ஒன்றியச் செயலா் சின்னத்தம்பி, துணைச் செயலா் சேகா் உள்பட அப்பகுதி பொதுமக்கள் திரளானோா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா், கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் அளித்தனா்.