எட்டயபுரம் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா். 5 போ் பலத்த காயமடைந்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியை சோ்ந்த ராஜா என்பவரின் மனைவி திலகா (43), மகள்கள் காவியா(17) சினேகா (19) மகன் லோகேஷ் (21), அதே பகுதியை சோ்ந்த பன்னீா்செல்வம் (44) மிலன் சதீஷ் (38) ஆகிய 6 போ் தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள உறவினரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வியாழக்கிழமை மாலை காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனா். காரை மிலன் சதீஷ் ஓட்டி வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை அதிகாலை எட்டயபுரம் அருகே சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையின் நடுவே சென்ற மாடு மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநா் காரை சாலையோரம் ஒதுக்கியுள்ளாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த திலகா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த மாசாா்பட்டி காவல் நிலைய போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று திலகா உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த மற்ற 5 பேரை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இவ்விபத்து குறித்து மாசாா்பட்டி காவல் நிலைய போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.