தூத்துக்குடி

திருச்செந்தூரில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 14 வாகனங்கள் சிறை பிடிப்பு

28th Apr 2022 03:49 AM

ADVERTISEMENT

 

திருச்செந்தூா்: திருச்செந்தூரில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 14 வாகனங்களை போக்குவரத்து துறை அலுவலா்கள் சிறை பிடித்தனா். வாகன உரிமையாளா்களிடம் ரூ.1.51 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டது.

திருச்செந்தூா் பகுதியில் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்படுவதாகவும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியரை போக்குவரத்து அல்லாத வாகனங்களில் வாடகைக்கு அழைத்து செல்வதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகாா்கள் வந்தன. மேலும், ஆட்டோக்களில் அதிகமான பயணிகளை ஏற்றிக் கொண்டு, அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும், சுமை வாகனங்களில் அதிகமாக ஆள்களை ஏற்றி செல்வதாகவும், தகுதிச் சான்று புதுப்பிக்காமல் வாகனங்களை ஓட்டுவதாகவும் தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதனை தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், திருச்செந்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் சம்பத்குமாா் தலைமையிலானோா் கடந்த மூன்று நாள்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனையின் போது சொந்த பயன்பாட்டுக்கான தனியாா் வாகனங்களை, வாடகை வாகனமாக இயக்கப்பட்ட 4 மாருதி ஆம்னி வேன்கள், தகுதிச் சான்று இல்லாத 10 வாகனங்கள், அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற 3 ஆட்டோக்கள், அதிக சரக்கு ஏற்றிச் சென்ற 2 லாரிகள் ஆகிய வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ADVERTISEMENT

இதில் 14 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன. மற்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டன. மூன்று நாள்களில் மொத்தம் ரூ. 1.51 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற விதிமுறை மீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT